கற்பழிப்பு புகாரை திரும்ப பெற மறுத்த இளம்பெண்ணின் கண்ணில் பெட்ரோல் ஊற்றிய வாலிபர் கைது
கற்பழிப்பு புகாரை திரும்ப பெற மறுத்த இளம்பெண்ணின் கண்ணில் பெட்ரோல் ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த திருமணமான 20 வயது பெண்ணை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு இளம்பெண் வெளியே சென்றபோது, வழி மறித்த அந்த வாலிபர் தன் மீது போலீசில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி மிரட்டினார்.
கண்கள் பாதிப்பு
இதற்கு இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டு வலியால் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஆமதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.