பனை விவசாயிகளை பாதுகாக்க தமிழகத்தில் பனம்பால் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

பனை விவசாயிகளை பாதுகாக்க தமிழகத்தில் பனம்பால் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார்.

Update: 2020-02-04 23:00 GMT
கோவை,

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் டாக்டர் ஏ.தர்மராஜ், மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.குருசாமி, மாநில செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடுமையான தண்டனை

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பாலியல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்றகுற்றங்களைகுறைக்க முடியும்.

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களை பரிசோதனை செய்தால் நலமாக இருக்கும். குரூப்-2, குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனை மரங்கள் குறைந்துவிட்டது

நமது மாநில மரமே பனை மரம்தான். தமிழகத்தில் 12 ஆயிரம் கோடி பனைமரங்கள் இருந்துள்ளது. தற்போது அது 4 கோடியாக குறைந்து விட்டது. தமிழகத்தில் மதுபானக்கடை நடத்த அனுமதி இருக்கிறது. ஆனால் பனம்பால் என்று அழைக்கப்படும் கள் இறக்க அனுமதி இல்லை.

அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் பனம்பால் இறக்க அனுமதி இருக்கிறது. இலங்கையில் பனம் பாலை சிறிய டப்பாவில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் பதநீர் இறக்குவதற்காக பனை மரத்தில் கலயம் கட்டினால் பனம்பால்தான் இறக்குகிறார்கள் என்று நினைத்து விவசாயிகளை கைது செய்கிறார்கள்.

பனம்பால் இறக்க அனுமதி

தென்னை விவசாயிகளை பாதுகாக்கதென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. அதுபோன்று பனை விவசாயிகளை காப்பாற்ற பனை மரத்தில் இருந்து பனம்பால் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம்.

மேலும் அரசு பனை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். அத்துடன் மரம் ஏற நவீன கருவிகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்