நெல்லை, அம்பையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, அம்பையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-04 22:45 GMT
நெல்லை, 

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யப்போவதாக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள், முகவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த அறிவிப்புக்கு எதிராக பாளையங்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி.யின் நெல்லை கோட்ட அலுவலகத்தின் முன்பு நேற்று மதியம் எல்.ஐ.சி. ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி மதுபால் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. முதல் நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி சிராஜூதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். எல்.ஐ.சி.யை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு உடனே செயல்படவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சி அதிகாரி சங்க நிர்வாகி சேவியர் வின்சென்ட், எல்.ஐ.சி., எஸ்.சி., எஸ்.டி., பவுத்த ஊழியர் மற்றும் அதிகாரிகள் நல சங்க நிர்வாகி சுவாமிநாதன், எல்.ஐ.சி. முகவர்கள் சங்க நிர்வாகி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் குழந்தைவேலு, முத்துகுமாரசாமி, சுந்தர்ராஜன், பட்டன், கண்ணன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க அம்பை கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் மகாதேவன், முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சேகர், முகவர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், எல்.ஐ.சி. பென்சன்தாரர் சங்கத்தை சேர்ந்த ராஜகோபால் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். இதில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த நாசர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்