சர்ச்சைக்குரிய பாதை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை; போலீசார்– அதிகாரிகள் சமரசம்
பிள்ளையார்புரத்தில் சர்ச்சைக்குரிய பாதை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. போலீசார்– அதிகாரிகள் விரைந்து சென்று சமரசம் செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே பிள்ளையார்புரத்தில் ஒரு பாதை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2008–ம் ஆண்டு இந்த சர்ச்சைக்குரிய பாதையில் ஒரு தரப்பினர் ஆர்ச் (வளைவு) கட்ட முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பாதை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அந்த பாதையில் ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் ஆர்ச் மற்றும் கேட் அமைக்க அனுமதி வழங்கியது. ஆர்ச் கட்டுமான பணிக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு கூறியிருந்தது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய பாதையில் நேற்று ஆர்ச் கட்ட ஒரு தரப்பு மக்கள் முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பாதுகாப்பு கருதி பிள்ளையார்புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஊருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் தடுப்புவேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (கன்னியாகுமரி), பால்ராஜ் (மதுவிலக்கு), பீட்டர் பால்துரை (நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு), சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் உள்பட ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.
இந்த நிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் பகல் 12 மணி அளவில் சர்ச்சைக்குரிய பாதையில் ஆர்ச் கட்டும் பணியில் ஒரு தரப்பு மக்கள் ஈடுபட்டனர். மணல், சிமெண்டு ஆகியவையும் அங்கு கொண்டு வரப்பட்டன. இதற்கு மற்றொரு தரப்பினரால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்த அனைத்து மக்களையும் தடுப்புவேலி அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதற்கிடையே கட்டுமான பணி தொடங்கிய சிறிது நேரத்தில் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி அன்பு அங்கு வந்தார். ஆர்ச் கட்டுமான பணியானது வட்டார வளர்ச்சி அதிகாரியின் அனுமதி இன்றி நடப்பதாக கூறியதோடு பணிகளை உடனே நிறுத்தும்படியும் உத்தரவிட்டார். இதனையடுத்து பணிகளை உடனே போலீசார் தடுத்தனர். மேலும் “ஆர்ச் கட்டுமான பணிக்கான திட்டம், வரைபடம் உள்ளிட்டவற்றை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்ற பிறகு பணிகளை தொடருங்கள்“ என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
எனினும் அந்த மக்கள் சமாதானம் ஆகவில்லை. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். எனவே அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்ச் கட்ட அனுமதி வாங்கிய மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வெகு நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருதரப்பு மக்களும் அங்கிருந்து சென்றனர். இதனையடுத்து அங்கு ஏற்பட்டு இருந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை கருதி பிள்ளையார்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.