காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
அப்போது, மனுக்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர், மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்து அவர்களிடம் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிக்கு நாற்காலி
மேலும் இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவருக்கு மருத்துவ சான்றுடைய அடையாள அட்டையும், முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500 செலவில் சக்கர நாற்காலியையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும் வருவாய்த்துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.