தொழிற்சாலை புகை கூண்டு சரிந்து ஊழியர் சாவு போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் புகை கூண்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது சரிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி போர்ச்சுகல் நாட்டு ஊழியர் பரிதாபமாக செத்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கு கண்ணாடி தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலை இயங்கிவருகிறது. இதில் கண்ணாடிகளை உருக்கும் போது ரசாயன புகையை வெளியேற்றுவதற்கு வசதியாக 2 பெரிய புகை கூண்டுகள் உள்ளது.
இந்த புகை கூண்டின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். இந்த புகை கூண்டின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ளதால் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் புகை கூண்டை அகற்றும் பணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஊழியர்கள் 28 பேர் வரவழைக்கப்பட்டனர்.
பரிதாப பலி
இந்தநிலையில், புகைக்கூண்டை அகற்றி புதிய புகைக்கூண்டை அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதில் நேற்று போர்ச்சுகல் நாட்டு ஊழியர் கார்லோஸ் சிமோஸ் (வயது 51) என்பவர் 10 அடி உயரம் கொண்ட புகை கூண்டின் மேல் ஏறி கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக புகை கூண்டு சரிந்து விழுந்தது. இந்த திடீர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கார்லோஸ் சிமோஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் இறந்து கிடந்த கார்லோஸ் சிமோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.