கஞ்சா பயன்படுத்துவது தொடர்பாக புழல் சிறையில் கைதிகள் மோதல் 6 பேர் மீது வழக்கு
புழல் சிறையில் கஞ்சா பயன்படுத்துவதை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
செங்குன்றம்,
புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக செல்போன், கஞ்சா, வெளி உணவுகள் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதற்கு சிறையில் உள்ள அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் தெரிகிறது. போலீசார் அவ்வப்போது சிறையில் சோதனை செய்து செல்போன், கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும் கைதிகளிடம் இதன் பயன்பாடு தொடர்ந்து உள்ளது.
சொகுசு வாழ்க்கை
இதற்கிடையே சிறைகளில் உள்ள கைதிகள் போதைப்பொருள், செல்போன் என சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் புழல் சிறையில் கஞ்சா பயன்படுத்துவதை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக நினைத்து, கைதி ஒருவரை மற்ற கைதிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
கஞ்சா குறித்து தகவல்
சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற பப்லு(வயது 26). இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்ணகிநகர் போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், சிறையில் உள்ள சில கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக உடனிருந்த மற்ற கைதிகள் நினைத்தனர்.
கைதிகள் மோதல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகள் அறையில் இருந்த ரமேசை, 6 கைதிகள் திடீரென்று சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த ஜெயிலர் அப்துல் ரகுமான் மற்றும் சிறை அதிகாரிகள், ரமேசை மீட்டனர். மேலும் கைதியை தாக்கிய மற்ற 6 கைதிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்த ரமேஷ், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
6 பேர் மீது வழக்கு
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைதி ரமேசை தாக்கியது, விசாரணை சிறையில் உள்ள கண்ணகிநகரைச் சேர்ந்த பிரசாத்(25), அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த சரவணகுமார்(26), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத்குமார்(29), மணலியைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் (20), திருவான்மியூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ்குமார்(25) என்பது தெரிந்தது.
இதுகுறித்து புழல் போலீசில் ஜெயிலர் அப்துல்ரகுமான் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கதுரை, பிரசாத் உள்ளிட்ட 6 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.