ஈரோட்டில் நள்ளிரவில், அட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 சரக்கு ஆட்டோக்கள் எரிந்து நாசம்

ஈரோட்டில் உள்ள அட்டை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 சரக்கு ஆட்டோக்கள் உள்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2020-02-02 22:30 GMT
ஈரோடு,

ஈரோடு ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 65). இவருக்கு சொந்தமான அட்டை கிடங்கு ஈரோடு சூளை கந்தையன்தோட்டம் நெசவாளர்காலனியில் உள்ளது. அங்கு பழைய அட்டைகள், தேவையற்ற நூல் பண்டல்கள் ஆகியன வைக்கப்பட்டு இருந்தன.

இந்த கிடங்கில் சுமார் 25 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து கிடங்கு ஊழியர் ஒருவர் பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். ஆனால் மலைபோல் குவிந்து கிடந்த அட்டைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயை அணைக்க பெரும் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சி நடந்தது.

சுமார் 5 மணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் கிடங்கில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 சரக்கு ஆட்டோக்களும் எரிந்து நாசமானது. ஒரு லாரியும் சேதமடைந்தது. மேலும், கிடங்கில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு நாய் தீயில் கருகி பரிதாபமாக இறந்தது.

நேற்று காலை வரை தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து புகை வந்துகொண்டே இருந்தது. அடிப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. புகை வெளிவந்த பகுதியில் எந்திரம் மூலமாக கிளறிவிடப்பட்டு, அதில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணி நடந்தது.

கிடங்கு இருந்த இடத்துக்கு அருகில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்