சித்ரதுர்கா அருகே லாரியின் டயர் வெடித்து கம்பி சிதறி தாக்கியதில் தம்பதி சாவு 6 குழந்தைகள் அனாதையான சோகம்
சித்ரதுர்கா அருகே, லாரியின் டயர் வெடித்து கம்பி சிதறி தாக்கியதில் தம்பதி இறந்தனர். இதனால் அவர்களின் 6 குழந்தைகளும் தற்போது அனாதையான சோகம் நிகழ்ந்து உள்ளது.
சிக்கமகளூரு,
விபத்தில் உயிரிழந்த திப்பேசாமி, சிவம்மா தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். விபத்தில் தாய்-தந்தை இழந்து விட்டதால் அந்த 6 குழந்தைகளும் தற்போது அனாதையாகிவிட்டன. இனி அந்த குழந்தைகளை யார் பராமரிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
ஆந்திர மாநிலம் மடகசீரா பகுதியில் இருந்து பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி நேற்று மதியம் செல்லகெரே தாலுகா காலுவேஹள்ளி கிராமத்தின் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து அதில் இருந்த கம்பி சிதறி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த திப்பேசாமி(வயது 45), அவரது மனைவி சிவம்மா(42) ஆகியோரின் தலையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். இதனை பார்த்து அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செல்லகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திப்பேசாமி, சிவம்மாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். இதற்கிடையே திப்பேசாமி, சிவம்மா இறந்தது பற்றி அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் அங்கு கூடி 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர் திப்பேசாமி, சிவம்மா உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரியின் முன்பக்க டயரில் அதிக அளவு காற்றை டிரைவர் அடைத்ததும், லாரியில் அதிக பாரம் தாங்காமல் டயர் வெடித்து கம்பி சிதறி தாக்கியதில் திப்பேசாமி, சிவம்மா இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து செல்லகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.
விபத்தில் உயிரிழந்த திப்பேசாமி, சிவம்மா தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். விபத்தில் தாய்-தந்தை இழந்து விட்டதால் அந்த 6 குழந்தைகளும் தற்போது அனாதையாகிவிட்டன. இனி அந்த குழந்தைகளை யார் பராமரிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.