மொழுகம்பூண்டி கிராமத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
மொழுகம்பூண்டி கிராமத்தில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணி,
ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மொழுகம்பூண்டி கிராமத்தை மத்திய அரசால் மிஷன் அந்தோதிய திட்டத்தின் அடிப்படையில் சிறந்த ஊராட்சியாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் இந்த கிராமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி கிராமம் முழுவதும் 29 தெருக்களுக்கு சிமெண்டு சாலை, பக்க கால்வாய் வசதிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விளையாட்டு திடலில் உயர் கோபுர விளக்கு அமைத்தல், கிராமமே தூய்மை செய்தல் என ரூ.2 கோடியே 18 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.
ஆய்வின் போது ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சாந்திசேகர், வக்கீல் கே.சங்கர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின்துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர் எம்.வேலு, பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.