சீனாவில் இருந்து 14 மாணவர்கள் அகோலா திரும்பினர் ; தீவிர மருத்துவ பரிசோதனை
கொரோனா வைரஸ் பரவும் சீனாவில் இருந்து 14 மாணவர்கள் அகோலா திரும்பினர். அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மும்பை,
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பெருமளவு உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். நேற்று அந்த நாட்டின் உகான் நகரில் தவித்த 324 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இதற்கிடையே சீனாவில் மருத்துவம் படிக்க சென்றிருந்த மராட்டியத்தின் அகோலாவை சேர்ந்த 14 மாணவர்கள் கடந்த 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.
முன்னதாக விமானத்தில் மும்பை வந்து இறங்கிய அவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் அகோலாவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் தீவிர பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர். 4 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்கள் யாருக்கும் கோரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதேபோல சீனாவில் இருந்து ஏற்கனவே மராட்டியம் திரும்பியவர்களில் 15 பேர் மும்பை, புனே, நாந்தெட், நாக்பூர் ஆகிய இடங்களில் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். தனிமை வார்டுகளில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் 15 பேருக்கும் கோரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதில் 13 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். 2 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.