கொரோனா வைரஸ் காய்ச்சல்: திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் தனிவார்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அருகே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
திருப்பூர்,
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பயிற்சி வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் நிலவரப்படி இதுவரை 259 பேர் பலியாகி உள்ளனர்.ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்த தொற்று நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை சார்பில் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வருகிற 5-ந்தேதி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்போது ரத்த வங்கி அருகே கொரோனா வைரஸ் நோய் தொற்று காணப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றனர்.