மத்திய பட்ஜெட் பற்றி மக்கள் கருத்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து திருச்சி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

Update: 2020-02-01 22:15 GMT
திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு:- இந்த பட்ெஜட்டில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க எந்த அறிவிப்பும் இல்லை. நதிகளை இணைக்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிடவில்லை. விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். விவசாயி என்றும் கடனாளியாக இருக்க வேண்டும் என்பது தான் நிலையா?. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு திருப்தியாக இல்லை.

ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க தலைவர் விசுவநாதன்:- விவசாயிகளுக்கு ‘கிசான்’ ரெயில், பயிர்க்கடன் ரூ.15 லட்சம் கோடி, விவசாயத்திற்கு 16 அம்ச திட்டம், வேளாண் துறைக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாயிகளுக்கு வட்டிச்சலுகை அறிவிக்கவில்லை. விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து இல்லை. கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பிரதமரின் பயிர்க்காப்பீடு பிரீமியம் குறைக்கப்படவில்லை. விமானத்தில் விவசாய பொருட்களை கொண்டு செல்லலாம் என்ற அறிவிப்பு சாதாரண ஏழைகளுக்கு பயனளிக்காது.

தொழில் நிறுவனங்கள்

சமூக ஆர்வலர் புஷ்பவனம்:- வளர்ச்சிக்கு உதவும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பழைய முறையில் வரி செலுத்துபவர்களுக்கு கழிவு, விதி விலக்கு போக லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. புதிய முறையில் அடுக்குகளுக்கு ஏற்ப வரி மாறி வரும் வரிவிகிதப்படி வரி செலுத்த முன்வருவோருக்கு நன்மை உண்டு. பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் அதிக நிதி ஒதுக்கீடு என்பது, அவர்களின் திறனை வளர்த்து பொருள் ஈட்டும் தகுதியை அதிகரிக்கும்.

குறு, சிறு தொழிற்சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன்:- குறு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக நலிவுற்ற தொழில் நிறுவன கடன்களை வசூலிப்பதற்கான கால அவகாசம் 31-3-2021 வரை நீட்டித்திருப்பதும், குறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையும், 2 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், திறன் பயிற்சிக்கு கடந்த ஆண்டை விட ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதும் வரவேற்கத்தக்கது. வருமான வரி வரம்பை மாற்றி அமைத்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஜி.எஸ்.டி.யில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மின்மயமாக்கல்

ரெயில்வே ஆர்வலர் ஜெகநாத்:- வருமான வரி குறைப்பு, ரெயில் பாதைகள் மின்மயமாக்கல், தேஜஸ் ரெயில்கள் அதிக அளவில் இயக்க முடிவு என்பது வரவேற்கத்தக்கது. அரசு- தனியார் பங்களிப்புடன் 150 ரெயில்கள் இயக்க கொண்டு வரப்படும் திட்டத்தை கைவிட வேண்டும். கடந்த பட்ஜெட்டில் ரெயில்வேக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் ரெயில்வேக்கு நிதி ஒதுக்கீடு பற்றி தெரிவிக்கப்படவில்லை. திருச்சி- பெங்களூரு இடையே ரெயில் இயக்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. திருச்சிக்கு புதிய ரெயில்கள் இயக்கம் பற்றி எதுவும் குறிப்பிடாதது வருத்தம் தான்.

பச்சமலையை சேர்ந்த பழங்குடியினர் சரோஜா முத்துராமன்:- தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மலைவாழ் மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சொந்த இடத்திலேயே தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்களின் நீண்ட கால கோரிக்கையான கிழங்கு விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்ஜெட் எங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என்று நம்பிக்கை அளிக்கிறது.

வேலை வாய்ப்பு

என்ஜினீயர் கமலி:- பெண்கள் நலத்திட்டத்திற்கு ரூ.28 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்க கூடியது. இதனை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும். பட்ஜெட் திட்டங்கள் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இளைஞர், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருந்தாலும் வேலைவாய்ப்பு என்பது இல்லாமல் உள்ளது. வருமான வரி விதிப்பு குறைக்கப்பட்டிருப்பது வரவேற்க கூடியது.

ஜி.எஸ்.டி. தொழில்முறை சங்க தலைவர் முஹம்மத் அஸ்கர்:- சேமிப்பு என்பது இந்தியாவின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கம். ஆனால் இந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கான எந்த ஒரு முக்கியத்துவமும் இடம் பெறவில்லை. வருமானவரி உச்சவரம்பு அதிகப்படுத்தப்பட்டாலும், அதன் மூலமாக கிடைக்கும் கழிவுகளை குறைத்திருக்க கூடாது.

ஆசிரியர் நீலகண்டன்:- வருமான வரி விதிப்பு திட்டத்தில் விலக்கு பெறுவதில் 100 பிரிவுகள் இருந்ததில் 70 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வரி சலுகைகளை பெற முடியாது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் மீண்டும் புதிய கல்வி கொள்கையை அறிவித்தது கண்டிக்கத்தக்கது. கல்வித்துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்க கூடாது. 

மேலும் செய்திகள்