துப்புரவு பணியில் இறங்கிய ஊராட்சி உறுப்பினர்கள்

பல்லடம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் துப்புரவு பணியில் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

Update: 2020-02-01 22:15 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள 10-வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் (வயது 36), 11-வது வார்டு உறுப்பினர் ஜோசப் (29) ஆகிய 2 பேரும் நீண்ட நாட்களாக தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

 இதையடுத்து ஊராட்சி உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ஜோசப் ஆகிய இருவரும் தங்கள் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். ஊராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் கூலி தொழிலாளர்கள். சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளனர்.

துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊராட்சி உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, துப்புரவு பணியாளர்கள் 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் சுகாதார பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்