திருவள்ளூர் அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த மகள் முகத்தில் ‘ஆசிட்’ வீசிய கொடூர தந்தை தடுக்க முயன்ற மாமியார், மருமகளும் காயம்
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட்டை வீசிச்சென்ற தந்தை உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதை தடுக்க வந்த மகளின் மாமியார் மற்றும் அவரது மருமகள் மீதும் தூவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு டன்லப்நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு சாய்குமார் (வயது 24) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் ஏ.சி.மெக்கானிக் ஆக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்ற பாலகுமார் என்பவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், பாலகுமாரின் மகளான தீபிகா (21) என்பவருக்கும், சாய்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
தனது மகளின் காதல் விவகாரம் அறிந்த பாலகுமார், காதலர்களை பிரிக்கும் எண்ணத்தில் வீட்டை காலி செய்துவிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.
திருமணம்
மேலும் தீபிகாவை அங்குள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். மேலும் அவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாய்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை இங்கிருந்து எப்படியாவது வெளியே அழைத்துச் செல்லுமாறு கூறி அழுது புலம்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, காதல் ஜோடிகளான சாய்குமார் மற்றும் தீபிகா இருவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அங்கு 8 மாதங்களாக இருவரும் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி உள்ளனர். தீபிகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரை அழைத்துக் கொண்டு சாய்குமார் தனது சொந்த ஊரான திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
ஆசிட் வீச்சு
இந்த நிலையில், மகள் தீபிகா, சாய்குமாருடன் அவரது வீட்டிற்கு வந்துள்ளதை பாலகுமார் தெரிந்து கொண்டார். உடனே அவர் அங்கு சென்று தீபிகாவிடம் ‘உன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அவரை பார்ப்பதற்கு உன்னை வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்’ என கூறினார். ஆனால் தீபிகாவோ தன் தந்தையுடன் செல்ல மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலகுமார் மற்றும் அவருடன் வந்த 4 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பவுடர் கலந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசினார்கள்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மீதும், அவரின் மூத்த மருமகளான திவ்யா முகத்திலும் பவுடர் கலந்த ஆசிட் வீசினார்கள். இதில் சிறிதுநேரத்தில் தீபிகா மயங்கினார். இதற்கிடையே பாலகுமார் உடனடியாக மயங்கி கிடந்த தன் மகளை காரில் கடத்திக் கொண்டு சென்றார்.
5 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதே நேரத்தில், பாலகுமார் வேப்பம்பட்டு அருகே உள்ள சாலையில் தீபிகாவை இறக்கி விட்டு தன்னுடன் வந்தவர்களுடன் அதே காரில் தப்பி சென்றுவிட்டார். முகத்தில் ஆசிட் பவுடரை வீசியதால் முகம் வெந்துபோன நிலையில் கர்ப்பிணியான தீபிகா, அவரது மாமியார் பாக்கியலட்சுமி, மூத்த மருமகளான திவ்யா ஆகிய 3 பேரும் வலியால் துடிதுடித்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் திருமணம் செய்த தன் மகள் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தலைமறைவான பாலகுமார் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் வேப்பம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.