கத்திக்குத்து வழக்கில் கைதானவர்: சிறையில் அடைக்க சென்ற கைதி திடீர் சாவு

கத்திக்குத்து வழக்கில் கைதான வாலிபரை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றபோது அவர் திடீரென இறந்தார். போலீஸ் தாக்கியதில் இறந்ததாக கூறி ஆம்புலன்ஸ் முன்பு மனைவி மறியலில் ஈடுபட்டார்.

Update: 2020-02-01 23:00 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 32). கூலித்தொழிலாளி. இவர் வேடசந்தூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தவணை முறையில் மோட்டார்சைக்கிள் வாங்கினார். அதற்கு மறவபட்டியை சேர்ந்த சவடமுத்து(35) என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தார். இந்த நிலையில் குறித்த நேரத்தில் தவணைத்தொகையை கட்டாததால் பிரபாகரனின் மோட்டார்சைக்கிளை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் குடிபோதையில் மறவபட்டிக்கு சென்று சவடமுத்துவிடம், உன்னால்தான் எனது மோட்டார்சைக்கிளை எடுத்துச்சென்று விட்டார்கள் என்று கூறி வாய்த்தகராறில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சவடமுத்துவை பிரபாகரன் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயம் அடைந்த சவடமுத்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் பிரபாகரனை போலீசார் வேனில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வேடசந்தூர் கோர்ட்டில் பிரபாகரனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவரை வேடசந்தூர் கிளை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது பிரபாகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மீண்டும் பிரபாகரனை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். அப்போது பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரபாகரனின் மனைவி ஜெயலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனிடையே பிரபாகரனின் உடலை போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் எடுத்துச்செல்ல முயன்றனர்.

அப்போது ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சை புறப்பட விடாமல் தடுத்து, போலீசார் தாக்கியதால்தான் பிரபாகரன் இறந்தார் என்றும், சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்யவேண்டும் என்றும், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் வசதி இருக்கிற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு செல்வது சந்தேகமாக இருக்கிறது என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆம்புலன்சை நகர விடாமல் அதன்முன்பு ஜெயலட்சுமி அமர்ந்து மறியல் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா உள்ளது, பிரபாகரனை யாரும் அடிக்கவில்லை, புகார் கொடுங்கள், முறைப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.

இதனையடுத்து பிரபாகரனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று வேடசந்தூர் மாஜிஸ்திரேட்டு பிரேம் ஆனந்த் முன்பு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இது வீடியோகேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பிரபாகரனின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

இதையடுத்து பிரபாகரனின் உடலை வாங்க மறுத்தும், அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பின்னரே பிரபாகரனின் உடலை வாங்கி சென்றனர்.

பிரபாகரன் இறந்த சம்பவம் எரியோட்டிலும், வேடசந்தூரிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்