தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவு கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஐ.பி. கேமராக்கள் நிறுவப்பட்டன. பத்திரப்பதிவுக்காக இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் அனைத்து சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு (நிர்வாகம் மற்றும் தணிக்கை) பதிவுத் துறைத் தலைவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட ஐ.பி. கேமரா திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜிக்மா நிறுவனம் மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அந்த நிறுவனம் ஒளிப்பட குறுந்தகடுகளை (டி.வி.டி.) வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுகளுக்கு இதுவரை ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அந்த கட்டணத்தை ரூ.100-ஆக உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதை பதிவு அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.