பதிவிறக்கம் செய்து குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய மாணவர் கைது
குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய மாணவரை குளச்சல் போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குளச்சல்,
குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நாடு முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகத்திலும் சைபர்கிரைம் போலீசார், சமூக வலைதளம் மூலமாக குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் யார்? என்பதை கண்காணித்து வருகிறார்கள்.
அந்த வகையில் குழந்தைகளின் ஆபாச படத்தை பரப்பியதாக திருச்சியில் ஒருவரை முதன் முதலாக சைபர் கிரைம் போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். அதன்பிறகு அவ்வப்போது சிலர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பரப்பியதாக குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சைபர் கிரைம் போலீசார் சமூகவலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததில், குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்ப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, குளச்சல் அருகே கொடுமுட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் பிபின் சுந்தர் ராஜ் (வயது 19) என்பவர், இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதற்காக பிபின் சுந்தர்ராஜ் ஒரு போலி முகநூல் கணக்கு தொடங்கி உள்ளார். குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்க்கும் அவர், போலி முகநூல் மூலம் பரப்பியதாக தெரிகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஆபாச படங்களை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மாணவர் பிபின் சுந்தர்ராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில், போலீசார் அதிரடியாக மாணவரை கைது செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.