விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.350 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், வங்கிகளில் ரூ.350 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-31 22:00 GMT
விழுப்புரம்,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தற்காலிக ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணியில் இருந்து ஓய்வு பெறும்போது வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 160-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில வங்கிகள் பூட்டிக்கிடந்ததை காண முடிந்தது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.350 கோடி அளவிற்கு காசோலை பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதேபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இந்தியன் வங்கி ஊழியர்கள், விழுப்புரத்தில் உள்ள வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார்.

இதில் வங்கி ஊழியர்கள் நாராயணசாமி, சேகர், அமீர்பா‌ஷா, பாலமுருகன், பிரசன்னா, சார்லஸ், நீலகண்டன், லாசர், கோவிந்தராஜன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வங்கித்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வங்கி ஊழியர் சங்க தாலுகா தலைவர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். பாபாஜி, நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார்.

இதில் பழனி, சிவக்குமார், கருப்பன், ஜெகநாதன், கிரு‌‌ஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்