குமரியில் புதிதாக 2 துணை மின்நிலையங்கள்; காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 துணைமின்நிலையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் தீன்தயாள் உபாத்தியாய கிராம மின்வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 57 லட்சத்தில் 56 சென்ட் நிலத்தில் துணை மின்நிலையம், மேலும் பள்ளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.2 கோடியே 58 லட்சத்தில் தெங்கம்புதூர் துணை மின் நிலையம் என 2 துணை மின்நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 துணை மின்நிலையங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதே சமயத்தில், ராஜாக்கமங்கலத்தில் நடந்த விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு துணை மின்நிலையத்தை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றினார்.
இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் தேன்மொழி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த துணை மின் நிலையங்கள் மூலம் 12 கிராமங்களில் வசிக்கும் சுமார் 8,400 குடும்பங்கள் பயன்பெறும்.