தமிழகத்தில் கோடை காலத்தில் ஒரு நிமிடம்கூட மின்தடை இருக்காது - நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் கோடை காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்தடை இருக்காது, என நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர சட்டத்தை கையில் எடுப்பதற்காக இல்லை. பார்கள் 24 மணி நேரம் செயல்படுவதாக இருந்தால் அதிகாரிகளிடம் புகார் கூறலாம். அதை விட்டுவிட்டு அவரே நேரடியாக சென்று பார்களை பார்ப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு செயலும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடாது என கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எங்காவது சட்டவிரோத செயல் நடக்கும் பட்சத்தில் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வமான பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபட வேண்டும். நாமக்கல் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை வந்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
ஊழல் வழக்கில் சிக்கி உள்ள தயாநிதி மாறன், அமைச்சர் ஜெயக்குமார் மீது ஊழல் புகார் கூற அவருக்கு தகுதி உள்ளதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. என்பது தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பாகும். அதில் தவறு நடந்தால் சட்டம் உடனடியாக கடமையை செய்யும் என்பதை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
கோடை காலம் தொடங்க உள்ளது. தற்போது நாள்தோறும் 15 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. கோடை காலத்தில் 17 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும் என எதிர்பார்க்கிறோம். அப்படி தேவைப்பட்டாலும் தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட மின்தடை இல்லாமல் இருக்க தேவையான மின் உற்பத்தி உள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
அப்போது சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.