பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-01-31 22:15 GMT
புதுக்கோட்டை,

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட வங்கிகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சுமார் ரூ.100 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தவேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சித்துறை வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமதுரை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரவிசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் அருணாசலம் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்