17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும்; ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை விட்டு விலகி வந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

Update: 2020-01-31 23:00 GMT
பெங்களூரு, 

மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. மந்திரிசபை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதத்தால் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இன்னும் ஒரு மாதம் தாமதமானாலும் கவலைப்பட மாட்டேன். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். ஆனால் மந்திரி பதவி உடனே வேண்டும் என்ற அவசரம் எங்களுக்கு இல்லை.

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதில் என்ன தவறு உள்ளது?. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்த அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கும்.

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு நான் தலைமை தாங்குவதாக கூறுவது தவறு. என்னுடம் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தலைவர்களே. புதிய எம்.எல்.ஏ.க்களை சந்திக்க எடியூரப்பா மறுப்பதாக கூறுவது தவறு. நாங்கள் யாருக்கும் கெடு விதிக்கவில்லை. அரசியல் விஷயங்களில் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது உண்மை தான். இதை எங்கள் கட்சி தலைவர்களிடம் போய் கேளுங்கள்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்