உயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு, தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள்
பல்லடம் அருகே உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக்கோரி தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே செம்மிபாளையம் கிராமத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தங்கள் நிலத்துக்கு சந்தைவழிகாட்டி மதிப்பில் உயர்ந்தபட்ச இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும், உயிரை விட மேலான நிலத்தை பறிக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், அதற்காக தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதாக அப்பகுதி விவசாயிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி தாலியை ஒப்படைக்க நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். அவர்கள் மஞ்சள் தாலி கயிற்றில் மஞ்சளை கட்டிக்கொண்டு கைகளில் ஏந்தியபடி வந்தனர்.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். உயர்மின்கோபுர போராட்டத்தின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.
கலெக்டர் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், உதவி கமிஷனர்கள் நவீன்குமார், கஜேந்திரன் மற்றும் வீரபாண்டி, தெற்கு போலீசார் வந்தனர். பின்னர் திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
விவசாயிகள் பேசும்போது, கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போராட்டம் நடத்தியபோது, சந்தை வழிகாட்டி மதிப்பின்படி உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இழப்பீடு அதிகரித்து வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் இன்று(நேற்று) செம்மிபாளையத்தில் 5 உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக குழிதோண்டும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது. இதனால் 30 விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு உயர்ந்தப்பட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., கலெக்டரிடம் விவரம் தெரிவித்தார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அழைத்துச்செல்லப்பட்டு, கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிட்டனர். அதன்பிறகு விவசாயிகள் கூறும்போது, சந்தை வழிகாட்டி மதிப்பில் உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க ஏற்கனவே கோரிக்கை வைத்தோம்.
அதன்படி நில வருவாய் ஆணையாளருக்கு ஏற்கனவே கலெக்டர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்குள் பணியை தொடங்கியுள்ளனர். பணியை நிறுத்த வேண்டும். எங்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கிய பிறகு பணி தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிடுகிறாம். உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்தால் எங்கள் போராட்டமும் தொடரும் என்றனர்.
பின்னர் இரவு 7.30 மணியளவில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.