பாபநாசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
பாபநாசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாபநாசம்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாபநாசம் வட்டார அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பாபநாசம் மேலவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். செயலாளர் யூசுப் ராஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுலைமான் வரவேற்றார். ராமலிங்கம் எம்.பி., தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ள மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.