எலச்சிபாளையம் அருகே, காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக எலச்சிபாளையம் அருகே புதுப்பாளையத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லிபாளையம் ஊராட்சி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் உள்ளது. அங்கு குடியரசு தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பொன்னம்மாள் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-
தற்போது கிராமசபை கூட்டம் நடந்து வரும் காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதனால் தொழில்கள் முன்னேற்றம் அடைந்து பொருளாதாரம் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க அனைவரும் தொடர்ந்து கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மாலா, மகளிர் திட்ட இயக்குனர் மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.