ஆயுதங்களுடன் புகுந்து வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்
கும்மிடிப்பூண்டியில் இரும்பு கம்பி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வியாபாரி வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் முயற்சி தோல்வியடைந்து தப்பிச்சென்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரெயில்வே மேம்பாலம் அருகே கட்டுமான பொருட்களை வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருபவர் பரசுராமன் (வயது 55). இவரது கடையின் பின்புறம் குடும்பத்தோடு வசித்து வருகிறார். மேலும் தனது வீட்டையொட்டி உள்ள 3 வீடுகளை அவர் வாடகைக்கு விட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் கடப்பாரை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களோடு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் காத்தமுத்து (43) மற்றும் திலீப்குமார் (35) ஆகியோர் வாடகைக்கு வசித்து வரும் வீடுகளை முதலில் வெளிப்புறமாக தாழ்பாள் போட்டனர்.
பின்னர் அவர்கள், மற்றொரு வாடகை வீட்டில் வசித்து வரும் தினேஷ் குமார்(30) என்பவரது வீட்டின் ஜன்னல் அருகே கையை விட்டு உள்பக்கமாக முன்பக்க கதவினை திறக்க முயன்றனர்.
பொருட்கள் திருட்டு
அப்போது சத்தம் கேட்டு எழுந்த தினேஷ் குமாரின் மனைவி கூச்சலிட்டவாறு கதவை திறந்து உள்ளார். இதனைக்கண்ட திருடர்கள் 2 பேரும் வீடுகளில் உள்ள வளாகச்சுவரில் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அப்போது அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்து பரசுராமனுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரங்களுக்கு உரிய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரசுராமனின் குடியிருப்பு வளாகத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளின் மூலம் மர்ம நபர்கள் வந்து சென்றதை தெரிந்து கொண்ட போலீசார் அதை வைத்து அவர்களை தேடி வருகின்றனர். தற்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து முக்கிய தடயங்கள் கிடைத்து உள்ள நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படையை அமைத்து விசாரணையை கும்மிடிப்பூண்டி போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர்.