தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடையும் - மணிகண்டன் எம்.எல்.ஏ. பேச்சு
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடையும் என்று திருப்புல்லாணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசினார்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் உடையத்தேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மணிகண்டன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த கால தி.மு.க. ஆட்சியில் மின்தடையால் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்தது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நிர்வாக திறமையால் தற்போது மின் மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
குடிமராமத்து திட்டத்தின் பயனால் ராமநாதபுரத்தில் எங்கு பார்த்தாலும் நீர்நிலைகள் நிரம்பி காட்சியளிக்கிறது. எனது தொகுதி நிதியை பயன்படுத்தி பல்வேறு சாலை, மின்விளக்கு, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டியதுவரும்.
மத்திய அரசு புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை நிறுத்தினாலும் தமிழக அரசு அதனை தொடர்ந்து வழங்கி வருகிறது. உலமாக்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க. அரசு சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக குந்துகாலில் ரூ.70 கோடியிலும், மூக்கையூரில் ரூ.113 கோடியிலும் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.20 கோடி செலவில் 20 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது. முஸ்லிம்களுக்கு தி.மு.க. ஊறுவிளைவித்து வருகிறது. பல நாடுகளில் குடியுரிமை சட்டம் உள்ளது. ஆனால் இங்கு தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடையும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், நகர் பாசறை சசிக்குமார், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சரசுவதி பாக்கியநாதன், கூட்டுறவு சங்க தலைவர் பழனிமுருகன், முத்துச்செல்வம், களரி தியாகராஜன், நல்லிருக்கை பால கிருஷ்ணன், நகர் பொருளாளர் ஜெயக்குமார், தினைக்குளம் ஊராட்சி செயலாளர் நாகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தவசி சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் கருப்பையா செய்திருந்தார்.