நான் துணை முதல்-மந்திரியாக மக்கள் விரும்புகிறார்கள் மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி

நான் துணை முதல்-மந்திரியாக வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.

Update: 2020-01-25 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எப்போதும் தவறியது இல்லை. கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கும். நான் துணை முதல்-மந்திரியாக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதை ஆதரிக்காமல் நான் நிராகரிக்க முடியாது.

பல்லாரி விம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்க மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய சம்பவங்கள் பீகார், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளதை பார்த்துள்ளோம். ஆனால் பல்லாரியில் இந்த சம்பவம் நடந்தது துரதிர்ஷ்டம்.

இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள். சித்ரதுர்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தங்கினேன். அங்கு படுக்கைகள் குறைவாக இருப்பதை அறிந்தேன். இந்த குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு சுகாதார சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட மாட்டார்கள். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்