தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத்தவர் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வலியுறுத்தல்

மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வட மாநிலத்தவரின் முழு விவரங்களை பதிவு செய்ய போலீஸ் நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதற்கான உரிய அறிவுறுத்தல் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-01-24 22:15 GMT
விருதுநகர்,

மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில குற்றச் சம்பவங்களில் இங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்னர் ஒரு சில மாதங்களே இந்த பதிவு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த நடவடிக்கை தொடரப்படவில்லை.

ஆனால் சமீபகாலமாக மாவட்டம் முழுவதும் சிறிய உணவகங்களில் இருந்து பெரிய தொழில் நிறுவனங்கள் வரை வட மாநில இளைஞர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் இந்த மாவட்டத்தில் நடந்த வங்கி கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருந்த வட மாநில இளைஞர்கள் தப்பிச் சென்று விட்டதால் நடவடிக்கை எடுக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்தே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தாங்கள் பணி அமர்த்தி உள்ள வட மாநிலத்தவரின் முழு விவரங்களை தங்கள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

ஆனால் இந்த பதிவு நடவடிக்கையினை தொழில் நிறுவனங்களும் செய்யாத நிலையில் போலீசாரும் அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாநில உளவு பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட மாநில இளைஞர்களின் விவரங்களை பதிவு செய்து தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உளவுத்துறை போலீசாரால் மாவட்டம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும், சிறு வணிக நிறுவனங்களிலும் பணி அமர்த்தப்பட்டுள்ள வட மாநில இளைஞர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க இயலாது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் தான் சட்டம்-ஒழுங்கு போலீசார் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

வட மாநில இளைஞர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றவியல் சம்பவங்களில் அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களை பற்றி முழு விவரங்களை பதிவு செய்து இருந்தால் தான் குற்றச் சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும். தற்போது உள்ள நிலையில் போலீசாரிடம் இம்மாவட்டத்தில் உள்ள வட மாநிலத்தவரின் விவரங்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.

சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கூட போலீசாரிடம் அசாமை சேர்ந்த ஒரு இளைஞர் தான் சிக்கி உள்ளார். இந்த வழக்கில் மேலும் யாருக்கும் தொடர்பு உண்டா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலேயே உள்ளது. தனியாக இந்த 20 வயது இளைஞர் இந்த குற்றச் சம்பவத்தை செய்திருக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு வணிக நிறுவனங்களில் இருந்து, பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பணி அமர்த்தப்பட்டுள்ள வட மாநிலத்தவரின் முழு விவரங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் முழுமையாக பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாமல் தனியே தொழில் செய்யும் வட மாநிலத்தவரின் விவரங்களையும் போலீசார் சேகரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்