உத்திரமேரூர் அருகே, பெரியார் சிலை உடைப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், காரணமான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-01-24 23:00 GMT
உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக் கம் அருகே களியப்பேட்டை கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் அமர்ந்து இருப்பது போல் தோற்றமுடைய முழு உருவமுள்ள பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1998-ம் ஆண்டு திராவிட கழகத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிலையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அதில் பெரியார் சிலையில் முகத்தில் இருந்த கண்ணாடி மற்றும் கை சேதமடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதை பார்த்ததும் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், அந்தோணிதாஸ், சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் உடனடியாக சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை போலீசார் துணியால் மூடி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சிலையை சுற்றி பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். சிலை உடைப்பு காரணமாக அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரித்து வலைவீசி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஆண்டு விழாவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் ரஜினியின் பெயரை களங்கப்படுத்துவதற்காக யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை உடைக் கப் பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்