தங்க கட்டி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ரூ.40 லட்சம் நூதன கொள்ளை 3 பேர் தப்பி ஓட்டம்
தங்க கட்டி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் நூதன முறையில் ரூ.40 லட்சம் கொள்ளையடித்து விட்டு தப்பி ஒடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிரவீன் குமார்(வயது 40). இவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பிரபாகரன் என்பவர் பிரவீன் குமாரை அணுகினார். குறைந்த விலைக்கு தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை வாங்கி கொள்கிறீர்களா? என்றும் பிரபாகரன் கேட்டார்.
அதற்கு பிரவீன் குமார் சம்மதம் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு தங்க கட்டிகள் தருவதாக கூறி பிரவீன் குமாரை, பிரபாகரன் அழைத்துச் சென்றார்.
ரூ.40 லட்சம் கொள்ளை
சென்னை ராயப்பேட்டை சிவசைலம் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கு முகமது, அகமது என்ற 2 பேர் இருந்தனர். அவர்களிடம் தங்க கட்டிகளுக்காக ரூ.40 லட்சத்தை பிரவீன் குமார் கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள் இருவரும் தங்க கட்டிகளை எடுத்து வருவதாக கூறி வீட்டிற்குள் சென்றனர்.
பிரவீன் குமார் நீண்ட நேரம் குறிப்பிட்ட வீட்டிலேயே காத்திருந்தார். ரூ.40 லட்சம் பணத்துடன் சென்றவர்களை பார்த்துவிட்டு வருவதாக பிரபாகரனும் வீட்டிற்குள் சென்று விட்டார். ஆனால் வெகுநேரமாகியும் ரூ.40 லட்சம் பணத்தை வாங்கி சென்றவர்களும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக சென்ற பிரபாகரனும் திரும்பி வரவில்லை. ரூ.40 லட்சம் பணத்துடன் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
ரூ.40 லட்சம் பணத்தை பறிகொடுத்த பிரவீன் குமார், இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நகைக்கடை அதிபரிடம் நூதனமான முறையில் ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.