உடன்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தியவர் கைது - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

உடன்குடியில் நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-24 22:15 GMT
உடன்குடி,

உடன்குடி அருகே உள்ள தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளைய பெருமாள் (வயது 45). இவர் உடன்குடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி உடன்குடி-செட்டியாபத்து ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று இளைய பெருமாளை வழிமறித்து அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை காரில் செய்துங்கநல்லூர் அருகில் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கினர். தொடர்ந்து இளைய பெருமாளிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் அவரை விடுவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைய பெருமாள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் சஞ்சய் காந்தியை (39) போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான சஞ்சய் காந்தி மீது ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் செய்திகள்