வாணியம்பாடி அருகே, மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 3 பேர் பலி

வாணியம்பாடி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்.

Update: 2020-01-24 23:00 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வடச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ் சுந்தர்(24), சந்தோஷ் (20) மற்றும் சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த வேலு (25). இவர்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலை 3 பேரும், ஒரே மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி நோக்கி சாவு வீடு ஒன்றுக்கு மேளம் அடிக்கச் சென்று கொண்டிருந்தனர்.

கிரிசமுத்திரம் என்ற இடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென மோட்டார்சைக்கிள்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தூக்கிவீசப்பட்ட தமிழ் சுந்தர் மற்றும் வேலு இருவரும் சம்பவ இடத்திலே பலியானார்கள். சந்தோஷ் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று படுகாயம் அடைந்த சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் இறந்துவிட்டார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்