மணல் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மணல்கொள்ளையர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, சுகாதாரம், கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாகவும், வாய் மொழியாகவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உள்ளது. பெருபான்மையான ஏரி, குளங்களில் தண்ணீர் உள்ளது. இருப்பினும் நீர்வரத்து கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை. எனவே நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.
சில சக்கரை ஆலைகளில் நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர். கரும்புக்கான பணத்தை 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பணம் வழங்க காலதாமதம் ஏற்படுத்தும் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பாமல் மாற்று ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வேண்டிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். மணல் கொள்ளையர்களுக்கு சில அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுகின்றனர்.
எனவே, மணல் கொள்ளையர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.