பல்லாவரம் அருகே குப்பைகளை அகற்றும்போது மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு - பெண் துப்புரவு தொழிலாளி காயம்

பல்லாவரம் அருகே சாலையோரம் குப்பைகளை அப்புறப்படுத்தும்போது மர்மபொருள் வெடித்ததால் துப்புரவு பெண் தொழிலாளி காயம் அடைந்தார்.

Update: 2020-01-23 22:30 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர், 22-வது தெருவில் நேற்று காலை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலையோர குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சங்கர்நகர் போலீஸ் நிலைய பழைய கட்டிடம் எதிரே கிடந்த குப்பையை அகற்றும்போது திடீரென, மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தேவகி(வயது 40) என்ற பெண் துப்புரவு தொழிலாளி காயம் அடைந்தார்.

சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. காலில் வீக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ், சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா ஆகியோர் சம்பவ இடத்துக்குசென்று விசாரித்தனர். தடயவியல் நிபுணர் சோபியாவும் சம்பவ இடத்துக்கு சென்று, வெடி பொருள்களை ஆய்வு செய்தார்.

அதில், சாலையோர குப்பையில் 250 கிராம் அளவுக்கு வெடிபொருள் தயாரிப்பு, சினிமா சூட்டிங் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பாஸ்பரஸ் துகள்கள் கிடந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் அவை மீண்டும் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவற்றை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கபட்டு, வெள்ளை பாஸ்பரஸ் துகள்களை எடுத்து, தண்ணீரில் மூழ்கடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிறிய துகள்களை எடுத்து, தண்ணீரில் போட்டபோது, அடுத்தடுத்து 6 முறை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பயந்துபோன ஜே.சி.பி. எந்திரம் டிரைவர் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றார்.

இதையடுத்து வேறுஒரு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, எஞ்சிய துகள்ளை எடுத்து, தண்ணீரில் மூழ்கடித்தனர். பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்ட, வெள்ளை பாஸ்பரஸ் துகள்ளை சாலையில் கொட்டியது யார்? என்பது தெரியவில்லை.

மர்மநபர்கள் யாராவது கொட்டினார்களா? அல்லது ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வந்து கொட்டப்பட்டதா? என்பது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்