கோவில் விழாக்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
கோவில் விழாக்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்ட அனைத்து சமுதாய பாரம்பரியம் காக்கும் கமிட்டி தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் திருமலைக்குமாரசுவாமி மற்றும் நிர்வாகிகள் சரவணன், கணேசன் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்ட கோவில்களில் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில், விழாக்களின்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம்.
இரவு முழுவதும் இந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் காவல்துறையினர் தடுத்து வருகிறார்கள். பாரம்பரிய கலாசாரத்தையும், பண்பாட்டையும் காக்கும் விதமாக இவற்றை மீண்டும் நடத்த அனுமதி அளிக்க கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.