10-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயம்: அடுத்த சட்டசபை கூட்டத்தில் மசோதா மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்
அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக அடுத்த சட்டசபை கூட்டத்தில் மசோதா கொண்டுவரப்படும் என மந்திரி சுபாஷ் தேசாய் கூறினார்.
மும்பை,
மராட்டிய தொழில் துறை மற்றும் மராத்தி மொழி மந்திரி சுபாஷ் தேசாய் மும்பை மராத்தி பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநிலத்தில் சுமார் 25 ஆயிரம் தனியார் ஆங்கில பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த பள்ளிகளில் மராத்தி பாடம் கற்றுக்கொடுக்கப் படுவதில்லை. அது விருப்பப்பாடமாக கூட வைக்கப்படவில்லை.
மராத்தி பாடம் கட்டாயம்
இதுபோன்ற எல்லா பள்ளிகளிலும் மராத்தி கற்று கொடுக்கப்படுவது இனி கட்டாயமாக்கப்படும். அனைத்து விதமான பள்ளிகளிலும் (அரசு, தனியார், சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள்) 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.
இவ்வாறு மந்திரி சுபாஷ் தேசாய் பேசினார்.