அப்பாவிகளின் உயிரை காவு வாங்க கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் தங்கியுள்ளனர் குமாரசாமி பரபரப்பு பேட்டி
அப்பாவிகளின் உயிரை காவு வாங்க கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் தங்கியுள்ளனர் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சான்றிதழ் தேவை இல்லை
கர்நாடகத்தில் சமீபகாலமாக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நான் கூறும் கருத்துகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் பதிலளித்து வருகிறார்கள். நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றி வருகிறேன். அதனால் எனக்கு பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து எந்த சான்றிதழும் தேவை இல்லை. கர்நாடகம் அமைதியை விரும்பும் மாநிலம். அனைத்து மதத்தினரும் பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
நாட்டின் பிற பகுதிகளில் கலவரங்கள் நடந்தாலும், கர்நாடகத்தில் மட்டும் எந்த வன்முறையும் உண்டாவது இல்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறைகள் அதிகரித்துவிட்டன. முதல்-மந்திரி எடியூரப்பா வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். கர்நாடகத்தில் ஒரு பயமான சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தொழில் முதலீட்டாளர்களுக்கு எடியூரப்பா என்ன மாதிரியான நம்பிக்கையை ஏற்படுத்துவார்?.
பதற்றமான விஷயங்கள்
கர்நாடகத்தில் சில பயங்கரவாதிகள் தங்கியுள்ளனர். அப்பாவிகளின் உயிரை காவு வாங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல் வருகிறது. அதனால் பதற்றமான விஷயங்களை அரசு சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். போலீசார் துணிச்சலாக செயல்படும் திறனை குறைப்பதாக என் மீது குறை சொல்கிறார்கள். எனக்கு மக்களின் நலனில் அக்கறை உள்ளது. போலீசார் மீதும் அக்கறை இருக்கிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும் இதே போலீசார் தான் பணியாற்றினர்.
ஆனால் நான் போலீசாரை தவறாக பயன்படுத்தவில்லை. இந்த பா.ஜனதா அரசு போலீசாரை தவறாக பயன்படுத்தி கொள்கிறது. என்னை மந்திரி ஈசுவரப்பா விமர்சிக்கிறார். இதே ஈசுவரப்பா தான் முன்பு எடியூரப்பா, ஷோபா ஆகியோரை பற்றி தவறாக பேசினார். எனது முன்னிலையிலேயே பா.ஜனதா தலைவர்களை தரம் தாழ்ந்து பேசினார். இது தொடர்பாக தேைவப்படும்போது உரையாடல் பதிவை வெளியிடுவேன்.
இந்துக்களுக்கு தொடர்பு இல்லை
மங்களூரு வெடிகுண்டு விஷயத்தில் ஆதித்யாராவ் என்பவர் சரண் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். இது வெறும் நாடகம். தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது?. போலீஸ் அதிகாரி ஹர்ஷா என்னை சந்தித்து பேசினார். மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் பணியாற்றும்படி அவருக்கு அறிவுறுத்தினேன். மங்களூரு வெடிகுண்டு விவகாரத்தில் இந்துக்களுக்கு தொடர்பு இல்லை என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார். இப்போது அவர் பேச வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.