உத்திரமேரூர் அருகே, கழுத்தை நெரித்து வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அனுமந்தண்டலம் மதுக்கடை எதிரே உள்ள சவுக்கு தோப்பில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பெருநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெருநகர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டம் மகாஜனம்பாக்கம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 34) என்பதும் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் வட்டம் ஆக்கூர் கூட்ரோட்டை சேர்ந்த சங்கர் (37), திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டம் உக்கம் பெரும்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்த சிராஜூதீன் (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் சக நண்பரான அரிகிருஷ்ணனோடு சேர்ந்து அனுமந்தண்டலத்தில் உள்ள மதுக்கடையில் மதுவாங்கி கொண்டு அதன் எதிரே இருந்த சவுக்குத்தோப்பில் அமர்ந்து மது குடித்ததாகவும் அப்போது அரிகிருஷ்ணன் அணிந்திருந்த 3 பவுன் நகைக்காக அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்ததாக அவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து சங்கர், சிராஜூதீன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.