கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நெல்லையில் நடந்த கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-01-22 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நேரு கலையரங்கத்தில் நேற்று நடந்தது. மண்டல அமைப்பாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் அறிமுக உரையாற்றினார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆழ்வார்குறிச்சி ரங்க ராமானுஜ ஜீயர், கருங்குளம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பராமச்சாரிய சுவாமிகள், நெல்லை புத்தாத்மானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கி பேசினர்.

விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ரத்தினசுவாமி, செயல் தலைவர் செல்லமுத்து, கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் கோபால் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.24 ஆயிரமாக இருக்கிறது. இந்த உச்ச வரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ஊக்கத்தொகை, நலவாரிய சலுகைகளை உயர்த்தி வழங் கப்படும் என மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இதுவரை அதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

கடந்த 2001-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தில் சுமார் 84 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க் கப்பட்டனர். அவர்களுக்கு நல வாரிய சலுகைகள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பிரசவ கால ஊக்கப்பணம், திருமண உதவிதொகை, மருத்துவ உதவி தொகை போன்ற சலுகைகள் சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. தற்போது நல வாரியம் செயல்படாத நிலையில் உள்ளது. அந்த நல வாரியக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மண்டல அமைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார். மாநாட்டில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் ராமசுப்பு, ஞானக்குட்டி சுவாமிகள், டாக்டர் நம்பியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்