இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்

விழுப்புரத்தில் இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

Update: 2020-01-21 23:09 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு, விபத்து ஏற்படும் சூழ்நிலையில் இருந்த சாலையில் மண்ணை கொண்டு குழிகளை சீரமைத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றதை பறிமுதல் செய்தல், புதுச்சேரி மாநில மதுபானங்கள் கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அரகண்ட நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம், விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சேகர், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், அய்யனார் உள்பட 27 போலீசாரை பாராட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கினார்.

அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதற்கான முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த பெண் அதே பகுதியில் 2, 3 நாட்களாக சுற்றித்திரிந்துள்ளார். அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்தவர்கள் அல்லது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள் யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

மேலும் போலீஸ் மோப்ப நாய், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி மருதூர் பகுதியில் நின்றுள்ளது. இதன்படி சந்தேகத்தின்பேரில் ஒரு சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். ரெயில்வே குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இரவு நேரத்தில் போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அரகண்டநல்லூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரிகளை கைது செய்துள்ளோம். இவர்களுக்கு புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து சப்ளை செய்து வருவது தெரியவந்துள்ளது. அவ்வாறு சப்ளை செய்பவர்கள் யார்? என கண்டறிந்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை மருந்தகங்கள் மட்டுமின்றி எங்கு விற்றாலும், டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்