சிறையில் இருந்தபடி கவர்னர் மாளிகைக்கு மிரட்டல்: போலீசாரின் நட்பால் ரவுடிகள் ஆதிக்கம்

சிறையில் இருந்தபடி கவர்னர் மாளிகைக்கு கைதி மிரட்டல் விடுத்திருப்பதால் போலீசாரின் செயல்படாத தன்மையினால் ரவுடிகள் ஆதிக்கம் தொடர்வது தெரியவந்துள்ளது. காவல்துறை, சிறைத்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2020-01-20 23:53 GMT
புதுச்சேரி, 

புதுவையில் ரவுடிகள் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில தொழில் அதிபர்கள் ரவுடிகளால் மிரட்டப்படுவதை போலீசாரிடம் புகாராக தெரிவித்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே ரவுடிகளுக்கு ஆதரவாக தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை பெற்றுக்கொடுத்து கமிஷன் பார்த்தனர். அது முதல் ரவுடிகளுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.

சிறைக்குள் இருக்கும் பிரபல ரவுடிகளுக்கு எந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட எது தேவைப்பட்டாலும் சிலரது தயவில் சிறைக்குள் தங்குதடையின்றி கிடைத்தது. குறிப்பாக செல்போன் பயன்பாடு என்பது அவர்களுக்கு எளிதாகி போனது.

சிறைக்குள் இருந்துகொண்டே செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தனர். அதை வைத்து வீடு, நிலங்களை பிரபல ரவுடிகள் வாங்கிக்குவித்தனர். மேலும் சிறுசிறு ரவுடிகளும் வெளிப்படையாக கடைகளுக்கு சென்று கடைக்காரர்களையும் மிரட்டி மாமுல் வசூலித்தனர்.

இந்த காலகட்டத்தில் புதுவை மாநில கவர்னராக வீரேந்திர கட்டாரியா நியமிக்கப்பட்டார். அவரிடமும் இந்த புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து அவரே நேரடியாக களத்தில் இறங்கினார். கடைகளுக்கு சென்று கடைக்காரர்களை விசாரிப்பது போலீசாரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை செய்தார்.

இதன் காரணமாக ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஓம்வீர்சிங் என்பவர் சிறைக்குள் சோதனைக்காக சென்று செல்போன்களை பறிமுதல் செய்து பிரபல ரவுடிகளை முறையாக கவனித்து வந்தார். சிறையிலும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. கடைகளில் மாமுல் வசூலித்த ரவுடிகளை போலீசார் பிடித்து நடுரோட்டில் கட்டி இழுத்து சென்ற காட்சிகளும் அரங்கேறின.

அவரது அதிரடி நடவடிக்கைகளை சமீபத்தில் மாற்றலாகிப்போன சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சனும் மேற்கொண்டார். அவ்வப்போது போலீசாருடன் சிறைக்குள் சோதனைக்கு சென்று ரவுடிகளை கவனிப்பதை மாதத்தில் ஒருநாள் வைத்துக்கொண்டார். அவரது கவனிப்பால் அதிர்ந்துபோன ரவுடிகள் பலர் ஊரைவிட்டே தலைமறைவாகினர். பெரிய தாதா, ரவுடிகள் என்றவர்கள் எல்லாம் பெட்டி பாம்பாய் அடங்கி கிடந்தனர். வியாபாரிகளும் மாமுல் என்ற பேச்சே இல்லாமல் தொழில் செய்து வந்தனர்.

இந்தநிலையில் சமீபகாலமாக மீண்டும் ரவுடிகள் அட்டகாசம் தலைதூக்கி இருப்பதாக தெரிகிறது. இதையே வெடிகுண்டு வீச்சுகளும், கொலைகளும் நமக்கு உணர்த்துகின்றன. இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடற்ற தன்மைதான் என்று கூறப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் தங்கள் சொல்படிதான் நடக்கவேண்டும் என்று கருதுவதும், உள்ளூர் அதிகாரிகளை மதிக்காமலும் அவர்களது கருத்துகளை கேட்காமலும் இருப்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

அதன் எதிரொலியாகத்தான் சிறையில் இருந்து கொண்டே கவர்னர் மாளிகைக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் இருந்துள்ளது. இதற்காக வெட்கப்பட வேண்டியது காவல்துறைதான். ஒரு மாநிலத்தின் உயரிய அதிகாரம் வாய்ந்த இடமாக கவர்னர் மாளிகை கருதப்படுகிறது. அதற்கே வெடிகுண்டு மிரட்டல், அதுவும் சிறைக்குள் இருந்து விடுக்கப்படுகிறது என்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் அல்ல.

அவர்களுடன் நட்பு பாராட்டி இந்த அளவுக்கு ஆளாக்கிவிட்ட காவல்துறை அதிகாரிகளும், சிறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்த சிறைத்துறை அதிகாரிகளும்தான். காவல்துறை, சிறைத்துறையில் உள்ள இத்தகைய கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி மாநிலத்தின் மரியாதை காற்றில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விஷயத்தில் காவல்துறையில் உயரிய பொறுப்பினை வகித்து தற்போது கவர்னராக உள்ள கிரண்பெடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாநில மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.

மேலும் செய்திகள்