முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையில் ஷீரடி சாய்பாபா பிறப்பிட சர்ச்சை தீர்ந்ததா?
ஷீரடி சாய்பாபா பிறப்பிட சர்ச்சை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாத்ரி அவரது பிறப்பிடம் என்று கூறியதை முதல்-மந்திரி திரும்ப பெற்றுக்கொண்டதாக சிவசேனா எம்.பி. கூறினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி நடந்த மாநில மந்திரி சபை முடிவின்படி, சாய்பாபாவின் பிறப்பிடமான பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரியை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும், அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இதையடுத்து சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை வெடித்தது. பாத்ரி கிராம மக்கள் சாய்பாபா தங்கள் ஊரில் தான் பிறந்தார் என்று கூறி வருகின்றனர். அதனை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஷீரடி தான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
முழு அடைப்பு
பாத்ரியை சாய்பாபாவின் பிறப்பிடம் என அறிவித்து மேம்படுத்தினால், ஷீரடியின் மகத்துவம் குறைந்து விடும் என்று கருதி, அங்குள்ள வியாபாரிகளும், உள்ளூர் மக்களும் நேற்று முன்தினம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
இந்த போராட்டத்துக்கு ஷீரடி பகுதி சிவசேனா எம்.பி. சதாசிவ் லோகண்டேவும் ஆதரவு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இதற்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஷீரடி மக்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். அதன்பேரில் நேற்று மும்பையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஷீரடி கோவில் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், துணை முதல்-மந்திரி அஜித்பவார், சிவசேனா எம்.பி. சதாசிவ் லோகண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சதாசிவ் லோகண்டே எம்.பி. கூறியதாவது:-
திருப்தி அளிக்கிறது
முதல்-மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. சாய்பாபா பிறப்பிடம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சாய்பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று கூறியதை முதல்-மந்திரி திரும்ப பெற்றுக்கொண்டார்.
பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களும் சாய்பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று கூறுவதில் தான் தங்களுக்கு பிரச்சினை, அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் பாத்ரி சாய்பாபாவின் பிறப்பிடம் இல்லை என்று முதல்-மந்திரியோ அல்லது அவரது அலுவலகம் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக முதல்-மந்திரியின் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாவிட்டால் தீவிர போராட்டம் நடத்துவோம் என்று ஷீரடி மக்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.