ஷீரடியில் முழுஅடைப்பு காரணமாக பக்தர்கள் வருகை குறைந்தது மந்திரி சகன் புஜ்பால் தகவல்

ஷீரடியில் முழுஅடைப்பு காரணமாக நேற்று பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்ததாக மந்திரி சகன் புஜ்பால் தெரிவித்தார்.

Update: 2020-01-19 23:00 GMT
ஷீரடி, 

ஷீரடியில் முழுஅடைப்பு காரணமாக நேற்று பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்ததாக மந்திரி சகன் புஜ்பால் தெரிவித்தார்.

ரூ.100 கோடி ஒதுக்கீடு

பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரியில் சாய்பாபா பிறந்ததாக ஒரு தரப்பினரால் நம்பப்படும் நிலையில் பாத்ரி நகரத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இதற்கு ஷீரடியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் ஷீரடியில் முழு அடைப்பிற்கு உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் அழைப்பு விடுத்தனர். இதன்படி நேற்று முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மந்திரி சகன் புஜ்பால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

முன்பதிவு ரத்து

நான் விசாரித்தவரை முழு அடைப்பு காரணமாக ஷீரடி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது தெரியவந்தது. இதேபோல் இந்த நகரில் உள்ள ஓட்டல்களில் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஷீரடி போன்ற கோவில் நகரத்திற்கு நல்லது அல்ல.

பாத்ரி, ஷீரடி பிரச்சினை பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்படவேண்டும். தனது பிறப்பிடம் குறித்த சர்ச்சையை சாய்பாபா ஒருபோதும் விரும்பி இருக்க மாட்டார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவரை காண பக்தர்கள் வந்து குவிகின்றனர்.

சாய்பாபா எந்த மதத்திற்கும், சாதிகளுக்கும் மேலானவர். இந்த பாகுபாடுகளை கடந்து அனைவரையும் ஒன்றிணைத்த சாய்பாபாவின் பெயரால் சண்டையிடுவது நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்