சாலைகளை செப்பனிட கோரி விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து நூதன போராட்டம்
குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட கோரி லாஸ்பேட்டையில் விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட கோரி லாஸ்பேட்டையில் விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகள் சேதம்
புதுவையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இந்த சாலைகளை செப்பனிட கோரி அரசுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதியார் சாலையும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சாலை உள்பட சேதமடைந்த அனைத்து சாலை களையும் அரசு சீரமைக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விண்வெளி வீரர்கள் போல்...
அதாவது சாலையில் இனி செல்ல முடியாது விண்வெளியில் தான் நடந்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நடந்த இந்த போராட்டத்தில் விண்வெளி வீரர்கள்போல் உடையணிந்து இருவர் நடந்தபடி சென்றனர். இந்த நூதன போராட்டம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
போராட்டத்தில் உழவர்கரை நகர தலைவர் சஞ்சய், செயலாளர் வினோத், கிளைத்தலைவர் நிஷாந்த், செயலாளர் சச்சின் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது, இன்னும் 2 மாத காலத்திற்குள் சாலைகளை சரிசெய்யாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப் படும் என்று தெரிவித்தனர்.