வாக்கு வங்கி கொள்கையை நாங்கள் அனுசரிக்கவில்லை நாட்டை மத அடிப்படையில் பிரித்தது காங்கிரஸ் தான் அமித்ஷா கடும் தாக்கு

நாட்டை மத அடிப்படையில் பிரித்தது காங்கிரஸ் தான் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

Update: 2020-01-18 23:45 GMT
பெங்களூரு, 

நாட்டை மத அடிப்படையில் பிரித்தது காங்கிரஸ் தான் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

தவறான தகவல்கள்

கர்நாடக பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் உப்பள்ளியில் உள்ள நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு கர்நாடக பா.ஜனதாவினர் வெள்ளி கதாயுதத்தை பரிசாக அளித்தனர். இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் உள்பட மத சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த கொடுமையை தாங்க முடியாமல் அவர்கள் அடைக்கலம் தேடி இந்தியாவிற்குள் வந்தனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது யாருடைய குடியுரிைமயையும் பறிக்கும் சட்டம் அல்ல. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வருகிறது. இதை சிறுபான்மையின மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமமாக பார்க்கிறோம்

நாட்டை மத அடிப்படையில் பிரித்தது காங்கிரஸ் தான். நமது நாட்டில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் நாங்கள் சமமாக பார்க்கிறோம். பாகிஸ்தான், வங்காளதேசத்தில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அந்த நாடுகளில் பெற்றோரின் கண் எதிரிலேயே சிறுபான்மையின பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்த நோக்கத்தில் தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து வந்து நமது நாட்டில் குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று 1946-ம் ஆண்டு மகாத்மாகாந்தி கூறினார். இது மட்டுமின்றி முன்னாள் பிரதமர் நேரு உள்பட பல்வேறு தலைவர்களின் விருப்பமும் இதுவாக தான் இருந்தது. அவர்களின் விருப்பத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். வாக்கு வங்கி கொள்கையை பா.ஜனதா அனுசரிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள், தலித் விரோதிகள். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் கொடுமைகளை அனுபவித்துவிட்டு இங்கு வந்துள்ளவர்களின் நிைலயை கண்டால் கண்ணீர் வருகிறது.

அயோத்தியில் ராமர்கோவில்

அவர்களின் நிலையை கண்டு மனம் உருகி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா? (அப்போது மக்கள் ராமர்கோவில் கட்ட வேண்டும் என்று முழங்கினர்).

இதற்கும் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவருக்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கியம். பிரதமர் மோடி துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்தார்.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். முன்பு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மவுனியாக இருந்தார். துல்லிய தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டது. இதுபோன்ற நாட்டின் உணர்வுபூர்வமான விஷயங்களிலும் ராகுல் காந்தி அரசியல் செய்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நீங்கள் ஆதரவு வழங்குவதாக இருந்தால், அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

150 இடங்களில் வெற்றி

இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, ‘‘கர்நாடகத்தில் உள்ள எனது தலைமையிலான பா.ஜனதா அரசு இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். அதன் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறும். அதில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும். தென்இந்தியாவில் கர்நாடகம் பா.ஜனதாவின் பலம் வாய்ந்த மாநிலம் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மாநில தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அமித்ஷா வருகையை கண்டித்து உப்பள்ளியில் போராட்டங்கள் நடந்ததால், பொதுக்கூட்ட மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மந்திரிசபை விரிவாக்கம்

இந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு அமித்ஷா உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்