காணும் பொங்கலையொட்டி பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
காணும் பொங்கலையொட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு நீராதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும் போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.
வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தானாகவே கரைந்து விடுகின்றன. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் ஒருவித நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மனஅழுத்தமும் குறைந்து விடுகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமூர்த்திமலையில் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று காணும் பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் குளிப்பதற்காக கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
பின்னர் அருவிக்கு சென்று உற்சாகமாக குளித்ததுடன் அங்குள்ள இயற்கை சூழலில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அடிவாரப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். அப்போது அணையின் இயற்கை சூழலில் அமர்ந்து குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்தனர். இதனால் திருமூர்த்திஅணை, அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.