காணும் பொங்கல் கொண்டாட்டம் - மாமல்லபுரத்தில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி மாமல்லபுரத்தில் 1½ லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்,
காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டது. சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி கொண்டு வந்து இருந்தனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்த புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது.
பலரும் கடற்கரை மணலில் உற்சாகமாக நடந்து சென்று பொழுதை கழித்தனர். நேற்று கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால் தடுப்புகளை தாண்டி கடலில் நின்று பொழுதை கழித்தனர். கடலில் இறங்கி குளிக்க போலீசார் விதித்த தடையை மீறி தடுப்புகளை தாண்டி ஆபத்தை உணராமல் பலர் கடலில் குளித்தனர். குழந்தைகளும் கடற்கரை மணலில் விளையாடினர்.
பொதுமக்களின் தற்காப்புக்காக படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்கள் கடற்கரையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். கடற்கரையில் போலீசார் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது எச்சரித்து கொண்டிருந்தனர். ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து மாமல்லபுரம் நகருக்குள் வர ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாமல்லபுரத்திற்கு 1½ லட்சத்திற்கும் அதிகமானோர் காணும் பொங்கலை கொண்டாட திரண்டிருந்ததாக மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தெரிவித்தார்.
மேலும் வெண்ணை உருண்டைக்கல்லை சுற்றி பார்க்க ரூ.40 கட்டணம் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பலரும் டிக்கெட் எடுக்காமல் கூட்டம், கூட்டமாக அங்குள்ள கம்பி வேலியை தாண்டி கட்டணமின்றி உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு சென்றனர். இவர்களை கட்டுப்படுத்த தொல்லியல் துறையின் பாதுகாவலர்கள் தடுத்தும் பலர் அதனை பொருட்படுத்தாமல் தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தனர். குறிப்பாக பெண்கள் ஆபத்தை உணராமல் கம்பி வேலியை தாண்டி உள்ளே நுழைந்து சென்றதை அதிக அளவில் காண முடிந்தது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இளநீர் வியாபாரி ஒருவர் அர்ச்சுனன் தபசு அருகில் சுற்றுலா வந்த பயணிகளிடம் விற்ற இளநீரில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்கு பதில் பப்பாளி இலை தண்டில் உள்ள குழலை இளநீர் குடிக்க உறிஞ்சு குழலாக வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன வியாபாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காணும் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதியது.