பிரான்சு நாட்டின் கயானாவில் இருந்து ‘ஜிசாட்-30’ தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது

பிரான்சு நாட்டின் கயானாவில் இருந்து ஜிசாட்-30 தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

Update: 2020-01-17 23:15 GMT
பெங்களூரு, 

பிரான்சு நாட்டின் கயானாவில் இருந்து ஜிசாட்-30 தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் உயர்தர தொலைக்காட்சி சேவைகள் கிடைக்கும்.

ஜிசாட்-30 செயற்கைகோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைகோள் ‘ஜிசாட்-30’-ஐ உருவாக்கியது. 3,357 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைகோள் பிரான்சு நாட்டின் கயானா நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 17-ந் தேதி (அதாவது நேற்று) சர்வதேச நேரப்படி அதிகாலை 2.35 மணிக்கு ஏரியன்-5 ராக்கெட் (வி.ஏ.251) மூலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி அந்த ராக்கெட் ஏவுதள கருவியில் பொருத்தும் பணி 38 நிமிடங்கள் 25 விநாடிகள் நடைபெற்றது. அதன் பிறகு திட்டமிட்டப்படி ஏரியன்-5 ராக்கெட் மூலம் நேற்று அதிகாலை 2.35 மணிக்கு ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நம்பிக்கையை பாராட்டுகிறோம்

இதுகுறித்து இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சேவைக்காக ஜிசாட்-30 செயற்கைகோள் திட்டமிட்டப்படி ஏரியன்-5 ராக்கெட் மூலம் பிரான்சு நாட்டின் கயானா நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சர்வதேச நேரப்படி இன்று (நேற்று) அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. உங்களின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.

ஏரியன் விண்வெளி ஏவுதள தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் இஷ்ரல் தனது டுவிட்டரில், ‘‘ஏரியன் ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைகோள், வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜிசாட்-30 செயற்கைகோள், புவி சுற்றுப்பாதையை மாற்றும் கோளப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. 2 வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாராட்டுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ சார்பில் பிரான்சில் செயற்கைகோள் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் பி.குன்கி கிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பதன் மூலம், இஸ்ரோ 2020-ம் ஆண்டை சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அந்த திட்ட குழுவினர், ஹாசனில் உள்ள செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி அந்த செயற்கைகோளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ெசயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பிறகு உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகள் செய்யப்படும்’’ என்றார்.

தனித்துவமான கட்டமைப்பு

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜிசாட்-30 செயற்கைகோள் ஒரு தனித்துவமான கட்டமைப்பை கொண்டது. நெகிழ்வு தன்மையுடன் தகவல்களை வழங்கும் திறன் உடையது. இந்த செயற்கைகோள் கியூ பாண்ட் மூலம் இந்தியா மற்றும் அதன் தீவுகள், சி பாண்ட் மூலமாக அரபு நாடுகள், அதிகளவிலான ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கும் சேவையை வழங்கும் திறன் கொண்டது.

இந்த செயற்கைகோள், டி.டி.எச். டெலிவிஷன் சேவைகள், ஏ.டி.எம். எந்திரங்களுக்காக விசாட் இணைப்பு ஏற்படுத்துவது, டெலிவிஷன் அப்லிங்கிங், டெலிபோர்ட் சேவைகள், டிஜிட்டல் சேட்டிலைட் செய்தி சேகரித்தல், மின்னணு ஆட்சி நிர்வாக செயலிகள் செயல்படவும் உதவும். மேலும் பெருகி வரும் தொலைத்தொடர்பு செயலிகளின் தொகுப்புக்காக மொத்தமாக தகவல்களை மாற்றும் வசதியும் கிடைக்கும்.

இவ்வாறு சிவன் தெரிவித்துள்ளார்.

உயர்தர தொலைக்காட்சி சேவை

விஞ்ஞானிகள் நடத்திய முதல்கட்ட சோதனையில், அந்த செயற்கைகோள் எந்த பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் அந்த செயற்கைகோளின் புவி சுற்றுபாதையை படிப்படியாக உயர்த்தி பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

அதன் பிறகு இந்த செயற்கைகோள் இறுதி புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். அனைத்து சுற்றுப்பாதை சோதனைக்கு பிறகு அந்த செயற்கைகோள் செயல்பட தொடங்கும். இந்த ஜிசாட்-30 செயற்கைகோள், சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சேவைகள் அதாவது உயர் தரமான தொலைக்காட்சி சேவை, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளை வழங்கும்.

15 ஆண்டுகள் ஆயுட்காலம்

இந்த செயற்கைகோளில் 12 சி மற்றும் 10 கியூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்ஸ் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே தகவல் தொடர்பு சேவையை வழங்கி வரும் இன்சாட்-4ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் நிறைவடைவதையொட்டி அதற்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோள், டெலிவிஷன் அப்லிங்கிங், விசாட் சேவைகளையும் வழங்கும்.

மேலும் செய்திகள்